ஞாயிறு, 28 டிசம்பர், 2008

தலைமுடி உதிர்கிறதா





அளவுக்கதிகமான வெய்யில், உப்புக்காற்று, குளோரின் கலந்த தண்ணீர், போதிய அளவு தூக்கம் மற்றும் ஓய்வு இல்லாமை, கூந்தலுக்கு அடிக்கடி செய்கிற கலரிங், ஸ்ட்ரெயிட்னிங் பேர்மிங் சிகிச்கைள், அதிக சூட்டில் கூந்தலை ப்ளோ ட்டிரை செய்வது, உடல் நலக்கோளாறு, திடீர் அதிர்ச்சி, தைரோய்ட் போன்ற பல பிரச்சினைகளுக்காக உட்கொள்ளும் மருந்துகள், மன உளைச்சல், கோபம், அதிக படபடப்பு டயட் சரியாக இல்லாமல் இருப்பது, தலை மற்றும் கழுத்துப் பகுதிகளில் ஏதேனும் பாதிப்புகள், கீமோதெரபி, மற்றும் டேயோ தெரபி போன்ற சிகிச்சைகள், இரும்பு சத்து குறைவான உணவுகள், கூரிய முனைகள் கொண்ட சீப்பினால் தலை சீவுவது, செரிமானக் கோளாறுகள் இருப்பவர்களுக்கு கூந்தல் தொடர்பான பிரச்சினைகள் அதிகம் இருக்கும். இவை அனைத்தும் முடி செழிப்பாக இல்லாமல் இருப்பதற்கும், முடி கொட்டுவதற்கும் சில காரணங்கள்.

ஒரு மாதத்தில் ஒரு முடியானது, அரை அங்குலம் வளர்கிறது, வெயில் நாட்களில் வேகமாகவும், குளிர் நாட்களில் மெதுவாகவும் இந்த வளர்ச்சி இருக்கும். பிறக்கும் போதே நம் மண்டையில் எத்தனை முடிகள் இருக்கப்போகின்றன என்பது தீர்மானிக்கப்பட்டு விடுகிறது. சராசரியாக நம்முடைய மண்டையில் 1,20,000 முடிகள் இருக்கும். தினம் 100 முடிகள் வரை உதிர்வது. சகஜமானது. நம் மண்டையின் வெளிப்பகுதியில் நம் பார்வையில் படுகிற முடி உயிரற்றது. அதற்கு இரத்தமோ, நரம்புகளோ, தசைகளோ கிடையாது. ஆனாலும் ஆரோக்கிய முடி 30 சதவீத நீளத்துக்கும், 14 சதவீத விட்டத்துக்கும் நீண்டு, விரிந்து கொடுக்கக்கூடியது என்பது விசித்திரமான தகவல்.

சரியான சத்தான சாப்பாடு இல்லாமல் எப்படிப்பட்ட விலை உயர்ந்த ஷாம்போ மற்றும் ஒயில்களாலும் கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்க முடியாது. முடி அதிகம் கொட்டுவோர் பசும்பால் தயாரிப்புகள், கஃபைன், கோலா, சொக்லேட் சீனி, உப்பு, பதப்படுத்தப்பட்ட உணவுகள் போன்றவற்றை குறைக்க வேண்டும். பி விட்டமின், மீன் எண்ணெய் பீட்டா கேரட்டின், விட்டமின் சி மற்றும் விட்டமின் ஈ தாதுப் பொருட்கள் செலேனியம் மற்றும் துத்தநாகச் சத்துக்கள் நிறைந்த உணவுகள் அதிகம் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும்.

தலைமுடியின் அவசியத்தையும் அதை பாதுகாக்கும் முறையையும் நாம் அனைவரும் அறிந்திருக்க வேண்டும். இளமை நிரம்பிய சரியான விகிதச் சத்துக்களைப் பெற்ற இரத்தத்தினால் தான் தலைமுடி கருப்பான நிறத்தைப் பெற்றுள்ளது. உடலில் உள்ள இரத்தம் போதுமானதாக இல்லையென்றாலோ, சுண்டிப் போனாலோ சரியான விகிதச் சத்துப் பொருள்களை இரத்தம் இழந்திருந்தாலோ நோய் எதிர்ப்புச் சக்திக் குறைந்தாலோ, வயதானாலோ முடி தன் கருமை நிறத்தை இழந்து விடுகிறது. உடல் பலவீனமடைந்தால் எவ்வாறு உடல் வெளுத்துப் போய்விடுகின்றதோ அதே போல மயிரும் வெளுத்துப் போய் விடுகிறது. மயிர் வெளுக்க இன்னும் நிறைய காரணங்களும் உண்டு.

முடி உதிரும் காரணம்

எப்போது மயிரின் அடிப்பாகத்தில் மண்டைக்குள் புதைந்திருக்கக்கூடிய வேர்கள் பலவீனமடைகின்றனவோ அப்போது மயிர்க் கால்கள் பலமிழந்து நிற்க முடியாமல் கீழே விழுந்து விடுகிறது. முடி எக்காரணம் கொண்டாவது அசுத்தம் அடைந்தால் முடியானது உதிர ஆரம்பிக்கும். மிகவும் குளிர்ந்த நீர், மிகவும் உஷ்ணமான நீர் ஆகியவற்றால் முடியை அலசினால் முடி உதிர ஆரம்பிக்கும். தலை குளித்து விட்டுச் சரியாகத் துவட்டாமல் விட்டு அதனால் நீண்ட நேரம் ஈரம் தலையில் தேங்கி நின்றால் முடி உதிரும். தலைகுளித்து விட்டு ஈரம் உலராமலிருக்கும் போதே எண்ணெய் வைத்து வாரிக் கொண்டால் முடி உதிரும் சிலர் தலை முடி நன்றாக வளர வேண்டும் என்பதற்காகவும் முடி உதிரக்கூடாது என்பதற்காகவும், கண்ட கண்ட எண்ணெய்களையும் தொலைக்காட்சிகளில் காட்டப்படும் தைலங்களையும் வாங்கி உபயோகிக்கின்றனர். இதனால் எங்களுக்குச் சரியான பலன்கள் ஏற்படவில்லையே என்று கூறுகின்றனர், எல்லோருக்கும் எல்லா எண்ணெய்களும் வேலை செய்வதில்லை, நன்றாக பிரச்சினைகளை ஆராய்ந்து எதனால் என்பதை புரிந்து வைத்தியம் செய்தால் கண்டிப்பாக முடி கொட்டுவது நின்று முடியும் வளரும்.

தலை முடி உதிர்ந்து விடுதல், தலை முடி போதிய வளர்ச்சி பெறாமை, தலை முடியின் நிறம் மாறி வெளுத்துப்போதல், தலையில் மெல்ல மெல்ல வழுக்கை உண்டாகுதல், தலை முடியின் நடுவில் அங்கங்கே சொட்டை விழுதல், தலை முடியில் பொடுகு, ஈறு, பேன் போன்றவை பல்கிப் பெருகுதல், தலையில் பக் போடுதல் சில சமயங்களில் முடிகளின் நடுவே புண் உண்டாக்கி விடும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக