சனி, 27 டிசம்பர், 2008

மனித உடல் - இறைவனின் அற்புதம்!

இவ்வுலகில் எண்ணற்ற படைப்புகளை இறைவன் படைத்திருந்தாலும் அவற்றில் மனிதனை ஓர் உன்னதமான, உயர்ந்த, சிறந்த படைப்பாக இறைவன் படைத்துள்ளான்.

மனிதனைச் சிறந்த படைப்பென்று கூறியிருப்பதற்கு எண்ணற்ற காரணங்கள் இல்லாமலில்லை. மனித உடலிலுள்ள ஒவ்வொரு பகுதியும் அற்புதத்தை எடுத்து பறைசாற்றிக் கொண்டுதான் இருக்கின்றன. அவற்றுள் ஒருசிலவற்றை இங்குக் காண்போம்.

கண்கள்:


கண் என்பது ஒளியை உணர்வதற்கு உதவும் ஓர் உறுப்பு ஆகும். மனிதனுக்கு இறைவன் இரண்டு கண்களைக் கொடுத்திருக்கிறான். உலகத்தை, வானத்தை, கடலை, ஆறுகளை, மலைகளை என எண்ணிலடங்கா படைப்புகள் அனைத்தையும் இந்த இரண்டு கண்கொண்டு பார்த்து மனிதன் உணர்கிறான். கண்ணின் அருமை குறித்து இரண்டு கண்ணும் இல்லாத ஒரு மனிதரிடம் கேட்டால்தான் தெரியும். உடலிலுள்ள எந்த உறுப்பை வேண்டுமானாலும் இழக்கத் தயாராக இருக்கக்கூடிய மனிதன், தன் கண்ணிற்குப் பகரமாக பல கோடிகள் கொடுத்தாலும் கொடுக்க முன்வர மாட்டான் என்பது தெள்ளத்தெளிவான உண்மை.

காது:


கண்ணால் கண்டு காட்சிகளை எப்படி அறிந்துக் கொள்ளுகின்றோமோ அதேபோன்று காதுகளையும் அற்புதமாகவே படைத்துள்ளான். மனிதர்கள் பேசக்கூடிய பேச்சுகள் தொடங்கி, குயில்கள் கூவுகின்ற இனியமான ஓசை வரை எத்தனையோ விதமான சப்தங்களை அறிந்து வைத்துக் கொண்டு, எத்தனை ஆண்டுகள் கழிந்த பின்னரும் இது இன்னாரின் குரல் அல்லது இது இந்தப் பறவையின் அல்லது விலங்கின் குரல்கள் என்று மனிதன் பிரித்தறிகின்றான் என்றால் அது இறைவன் வழங்கியுள்ள இரண்டு காதுகளின் அற்புதமல்லவா?

நாக்கு:


நாவானது, வாயின் அடியில் எலும்போடு இணைக்கப்பட்ட எலும்புத்தசை என்னும் வகையைச் சேர்ந்த இளஞ்சிவப்பு நிறத் தசை ஆகும். இது வாயில் இடும் உணவைப் பற்கள் மெல்லுவதற்கு வசதியாக நகர்த்தியும் புரட்டியும் திருப்பியும் தரும் உறுப்பு. மென்ற உணவை விழுங்கி உணவுக் குழாய்க்குத் தள்ளுவதும் நாக்கே. உணவின் சுவையை உணரும் முதன்மையான உறுப்பு நாக்காகும். நாக்கின் மேற்புறத்தில் சுவையுணர் நுண்புடைப்புகள் பல உள்ளன. வாயில் ஊறும் உமிழ் நீரினால் நாக்கு எப்பொழுதும் ஈரமாக உடலில் உள்ள தசைகளில் நாக்கு வலிமையான தசைகளில் ஒன்று. நாக்கு பலவாறு வளையவல்லது, எனவே வெவ்வேறு வகையான ஒலிகள் எழுப்பி மொழி பேசுவதற்கும் நாக்கு மிகவும் துணை செய்கின்றது. இவ்வுலகில் தோன்றிய, பேசப் படுகின்ற அத்தனை மொழிகளும் நாவினால்தான் பேசப் படுகின்றன.

உடம்பிலேயே தொடு உணர்ச்சி மிக்க உறுப்பு நாக்கின் நுனி ஆகும். நாக்கின் மேற்புறத்தில் உள்ள நுண்புடைப்புகளில் நான்கு வகையான நுண்புடைப்புகள் உள்ளன. சுவையுணர் நுண்புடைப்புகளுக்கு நாமுடிப்பு என்று பெயர். நாமுடிப்புகளின் அமைப்பைப் பொருத்து அவை இனிப்பு, புளிப்பு, கசப்பு, கரிப்பு, உவர்ப்பு ஆகிய ஐந்து வகையான சுவைகளைத் தனித்தனியாகவும் கூட்டாகவும் உணரக்கூடிய விதத்தில் இறைவன் படைத்துள்ளானே இது இறைவனின் அற்புதப் படைப்பல்லவா?

அண்மைக்காலம் வரையிலும் நாவின் வெவ்வேறு பகுதிகள் வெவ்வேறு சுவைகளை உணர்வதாகப் பாடநூல்களில் இருந்து பொதுஅறிவுக் கட்டுரைகள் வரை தவறாகவே எழுதப்பட்டு வந்தது. தனித்தனிச் சுவைகளை உணர நாவினில் தனியான இடங்கள் ஏதும் இல்லை.

பல்:


அடுத்ததாகப் பற்கள். நாம் உண்ணக்கூடிய உணவினைப் பற்களின் மூலம் அசைபோட்டு நம் குடலுக்குச் செலுத்துவதில் பற்கள் தலையாய பணியைச் செய்கின்றது. மனிதர்களுக்கு இருதடவைகள் பற்கள் முளைக்கின்றன. குழந்தைகளுக்குப் பற்கள் ஆறு மாத வயதில் முளைக்கத் தொடங்குகின்றன.

வாய்:


பொதுவாக வாயின் பயன்பாடு உணவு, நீர் இவைகளை உட்கொள்ளுதலாகும்.

முகம்:


முகம் தலையின் முன்பகுதி ஆகும். மனிதரில் நெற்றி முதல் நாடி வரையான பகுதிகள் இதிலடங்கும். நெற்றி, கண்ணிமை, கண்கள், மூக்கு, கன்னம், வாய், நாடி ஆகிய பகுதிகள் மனித முகத்திற் காணப்படுகின்றன. மனிதரை அடையாளங் காண முகங்களே பொதுவாகப் பயன்படுகின்றன. இருவரின் முகங்கள் முழுஒத்தத் தோற்றம் கொண்டிருப்பதில்லை. ஆதலால் அடையாள அட்டைகளில் முகத்தின் புகைப் படங்களே பயன்படுத்தப்படுகின்றன. உலகத்தில் தற்பொழுது வாழக்கூடியவர்களில் எத்தனையோ கோடி மனிதர்களின் முகமும், இதற்கு முன்னர் வாழ்ந்து மறைந்தவர்களின் முகமும் முழுமையான ஒத்த தோற்றத்தைக் கொண்டிருக்கவில்லை. பேச்சின்றி உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதில் முக பாவம் முக்கியப் பங்காற்றுகின்றது.

மூக்கு:


வாசனை திரவியங்கள் தயாரிக்கின்ற அல்லது விற்கப்படுகின்ற பகுதியின் பக்கம் சென்றோம் என்றால் நாம் அந்த இடத்தை அடைவதற்கு முன்னமே நம்முடைய மூக்கின் நுகரக்கூடிய சக்தியின் மூலம் அந்த வாசனை பற்றிய செய்தியை அறிந்து கொள்கிறோம். அதேபோன்று துர்நாற்றம் வீசக்கூடிய பகுதிக்குச் சென்றால் அந்தப் பகுதியை அடைவதற்கு முன்னாலேயே அதன் துர்நாற்றத்தை அறிந்து நமக்கு எச்சரிக்கை கொடுக்கின்றது நம்முடைய மூக்கு. மேலும் கண் தெரியாத மற்றும் காது கேளாதவரையும் அந்த வாசனை மூக்கின் உதவியை கொண்டு நுகர வைக்கின்றது.

கைகள்:


நமக்கு இரண்டு கைகளைக் கொடுத்து, அவற்றின் மூலம் எத்தனை விதமான வேலைகளை நாம் செய்து முடிக்கிறோம். தற்பொழுது தட்டச்சு மூலம் இந்தக் கட்டுரையை உருவாக்கிக் கொண்டிருக்கின்றேனே இதுவும் கைகளினால் செய்யப் படும் அற்புதமல்லவா? நாம் உண்ணுவதற்கும் உடுத்துவதற்கும் இன்னும் இயற்கை தேவைகளை முடித்துவிட்டு சுத்தம் செய்வதற்கு எனப் பல்வேறு பணிகளை கைகளினால் நிறைவேற்றுகிறோம் அல்லவா!

விரல்கள்:


நம்முடைய கைகளில் இருக்கக்கூடிய விரல்களைப் பற்றி நாம் என்றாவது சிந்தித்ததுண்டா? விரல்களில் உள்ள ரேகைகள் பற்றி எண்ணியதுண்டா? பக்கத்திற்கு ஐந்து விரல்களைக் கொண்ட நம் விரல்களில், ஒரு விரலில் உள்ள ரேகையைப் போன்று அடுத்த விரலில் இருப்பது கிடையாது. ஐந்து விரல்களின் ரேகைகளும் ஐந்து விதமானது என்பது நம்மில் எத்தனை பேர் அறிந்து வைத்து அதற்காக நாம் நன்றி செலுத்தியுள்ளோம்? உதாரணமாக நாம் வேலை செய்யக்கூடிய இடங்களில் வருகைப் பதிவை அறிவதற்காக வேண்டி நம் கை விரல்களின் ரேகையை பதிவு செய்து அதனைக் கொண்டு நமது தினசரி வருகையை அறியும் புதுமுறை பரவலாக அறிமுகப் படுத்தப் பட்டு வருகிறது. நம்மில் யாராவது ஒருவரின் கை விரல் ரேகை மற்றவரின் கை விரல் ரேகையோடு ஒத்துப் போயிள்ளது என்று கேள்விப் பட்டதுண்டா?

கால்கள்:


கால் என்பது உடலைத் தாங்குவதற்கும் நடப்பதற்கும் பயன்படும் உடல் உறுப்பாகும். அன்றாடம் நாம் தூங்கி விழித்தது முதல் மறுபடியும் தூங்கப் படுக்கைக்குச் செல்லும்வரை எவ்வளவு தூரங்களைக் கடக்கிறோம்? விபத்தில் கால் இழந்தவர்கள் அல்லல்படுவதைக் கண்டால் கால்களின் அருமை தெரியும்.

மூளை:


மனிதமூளை என்பது மையநரம்புத் தொகுதியினுடைய மையமும் சுற்றயல் நரம்புத் தொகுதியினுடைய அடிப்படைக் கட்டுப்பாட்டு நிலையமுமாகும்.

மனிதமூளை, சிக்கல் தன்மை குறைந்ததும் பிரக்ஞை இன்றியும் நிகழும், மனிதரின் அனிச்சை செயற்பாடுகளான சுவாசம், சமிபாடு, இதயத்துடிப்பு போன்ற செயற்பாடுகளையும், பிரக்ஞையுடன் நிகழும் சிந்தனை, புரிதல், தர்க்கம் போன்ற சிக்கலான உயர்நிலை செயற்பாடுகளையும் கட்டுப்படுத்துகிறது.

மற்றைய எல்லா உயிரிகளையும் விட இத்தகைய சிக்கலான உயர்நிலை செயற்பாடுகளைச் சிறப்பாகக் கையாளும் திறனை மனித மூளை பெற்றிருக்கிறது. உலகில் இதுவரை மனிதர்கள் கண்டுபிடித்த அத்தனை அறிவியல்களிலும் மனித மூளையில் 10% மட்டுமே பயன் படுத்தப் பட்டிருக்கிறதாம்.

இதயம்:


இதயம் என்பது முதுகெலும்புகளில் காணப்படும் ஒரு தசையாலான ஓர் உறுப்பாகும். இதன் வேலை இரத்தத்தைக் குருதிக் குழாய்களின் வழியாகச் சுழற்சி முறையில், சீரான வேகத்தில் உடல் முழுவதும் செலுத்துவது ஆகும். இதயமானது இதயத்தசை என்னும் சிறப்புத் தசையால் ஆனது.

இதயத்திற்கு இரத்தத்தைக் கொண்டு வரும் குழாய்கள் சிரைகள் எனவும் இதயத்தில் இருந்து உடலின் மற்ற பாகங்களுக்கு இரத்தத்தை எடுத்துச் செல்லும் குழாய்கள் தமனிகள் எனவும் அழைக்கப்படுகின்றன. இதயமானது பெரிகார்டியல் நீர்மம் என்னும் நீர்மத்தினால் சூழப்பட்டுள்ளது. இந்நீர்மமானது இதயத்தை அதிர்ச்சிகளில் இருந்தும் இதயம் சுருங்கி விரியும் போது மற்ற பாகங்களுடன் உராய்வதைத் தடுக்கவும் உதவுகிறது.

மனித உடலில் இதயமானது மார்பின் இடப்பகுதியில் மார்பு எலும்புகளுக்குப் பின் பகுதியில் அமைந்துள்ளது. இடப்பகுதியில் இடது நுரையீரலானது வலது நுரையீரலை விடச் சிறியதாக இருக்கிறது. மிக மிகச் சிலருக்கு வலப்புறம் இதயம் அமைந்திருப்பதாகச் சொல்லப் படுகிறது.

இதயத்தின் வலப் பக்கப் பணியானது, அசுத்த இரத்தத்தைச் சேகரிப்பது ஆகும். அசுத்த இரத்தமானது வலது ஆரிக்கிளை அடைகிறது. பின் இது வலது வெண்ட்டிரிக்கிள் வழியாகக் குருதி நுரையீரல்களுக்கு அனுப்பப் படுகிறது. இங்கு கார்பன்-டை-ஆக்ஸைடு வெளியேற்றப்பட்டு இரத்தத்தில் ஆக்ஸிஜன் கலக்கிறது.

இதயத்தின் இடப்புறமானது தூய இரத்தத்தைப் பெறுகிறது. இது இடது ஆரிக்கிளை அடைகிறது. இங்கிருந்து குருதியானது இடது வெண்ட்டிரிக்கிளை அடைந்து அங்கிருந்து உடல் முழுவதற்கும் அனுப்பப் படுகிறது.

இதயத்தின் கீழ்ப்பகுதியில் உள்ள வெண்ட்டிரிக்கிள்கள் மேலே உள்ள ஆரிக்கிள்களை விடத் தடிப்பாக அமைந்து இருக்கின்றன. அதிலும் இடது வெண்ட்டிரிக்கிளானது இரத்தத்தை உடல் முழுவதும் செலுத்த அதிக வேகம் தேவைப்படுவதால் வலது வெண்ட்டிரிக்கிளை விடத் தடிப்பாக உள்ளது.

கிட்னி:


கிட்னியின் தலையாய பணியை அறிந்து கொண்டால் இறைவன் மனித உடலில் அற்புதங்களை நிறைவாக கொடுத்திருக்கின்றான் என்பதை எளிதில் அறிந்து கொள்ளலாம். ரத்தத்தில் உள்ள தேவையற்ற கழிவுகளைப் பிரித்து, சிறுநீருடன் அனுப்புவதுதான் சிறுநீரகத்தின் (கிட்னி) வேலை. நாம் தினசரி குடிதண்ணீரில் தொடங்கி எத்தனை விதமான குடிபானங்களை குடித்துக் கொண்டிருக்கிறோம். அத்தனை பானங்கள் மூலம் பெறக்கூடிய சத்துகளை இரத்தத்துடன் கலந்து நம் உடலுக்குத் தேவையான ஆரோக்கியத்தைக் கொடுத்து தேவையற்ற கழிவுகள் சிறுநீரகத்தின் உதவியால் வெளியேறுகிறது. இந்த செயல்கள் முறையாக அன்றாடம் நமக்கு நடந்தேறிக் கொண்டிருக்கிறது,

நுரையீரல்:


நுரையீரல் என்பது உயிரினங்கள் மூச்சுக் காற்றை இழுத்து வெளிவிடும் ஒரு முக்கிய உறுப்பாகும். மூச்சுக் காற்றை இழுத்து விடுதலுக்கு மூசுதல் என்று பெயர். வாயுப்பறிமாற்றம் இவ்வுறுப்பின் முக்கிய பணியாகும். மேலும் சில முக்கிய வேதிப் பொருட்களை உற்பத்தி செய்வதும் வேறு சில வேதியல் பொருட்களை செயலிழக்க செய்வதும் நுரையீரலின் பணியாகும்.

காற்றில் உள்ள ஆக்ஸிஜனை (உயிர்வளி, பிராணவாயு) இரத்ததில் சேர்ப்பதும் இரத்ததில் உள்ள கார்பன்-டை-ஆக்ஸைடை (கரிமக்காடி வளிமம் கரியமிலவாயு)வைப் பிரித்து உடலிலிருந்து வெளியேற்றுவதும் நுரையீரலின் முக்கிய பணியாகும்.

மூச்சு இழுத்துவிடுதல் தவிர இதர பணிகள் வாயுப்பறிமாற்றம் தவிர நுரையீரல் வேறு சில பணிகளையும் செய்கிறது

இருதயத்திற்கு இரு புறமும் பாதுகாப்பாக இருப்பது, இதயத்தை அதிர்வுகளில் இருந்து காப்பது, சிரைகளில் ஏற்படும் இரத்தக் கட்டுகளை உடலின் பிற பகுதிகளுக்குச் செல்லாமல் தடுப்பது, சில முக்கிய வேதிப் பொருட்களை உற்பத்தி செய்வது, வேறு சில வேதிப் பொருட்களை செயலிழக்க செய்வது போன்றவை நுரையீரல் செய்யும் பணிகளாகும்.

முடிகள்:


நம் உடம்பில் முடியைக்கூட மிகவும் நேர்த்தியான, ஒழுங்கான அமைப்பில் அமைத்திருக்கின்றான். அதாவது மனித உடலில் பல்வேறு இடங்களில் முடிகள் முளைத்தாலும் ஒவ்வொன்றிற்கும் அளவு உள்ளது. அவ்வாறு அளவுகள், வரையரைகள் இல்லையென்றிருந்தால் தலையில் மற்றும் முகத்தில் முளைக்கக்கூடிய முடியின் அளவுபோல் கைகளிலும் கால்களிலும் இன்னும் உடம்பு முழுவதும் முளைக்குமேயானால் தோல்களை காணமுடியாத முடி கொண்ட மனிதனைத்தான் காண நேரிடும். உடம்பிலுள்ள முடிகளுக்கென்ற ஒரு வளரும் படிநிலை, தலை மற்றும் தாடைபகுதிகள் என்று வேறொரு வளரும் படிநிலைகளை இறைவன் ஏற்படுத்திக் கொடுத்திருப்பதால் மனிதன் சகஜமாக நடமாட முடிகிறது. இதுவெல்லாம் இறைவன் மிகப்பெரிய அற்புதமல்லா?

ஆக இறுதியாக மனித உடல்களில் எண்ணற்ற உடல் உறுப்புகள் இருந்தாலும் ஒவ்வொரு உறுப்புகளும் ஒவ்வொருவிதமான அற்புதங்களை அள்ளிக் கொடுத்துக் கொண்டுதான் இருக்கின்றன என்பதில் யாருக்கும் மாற்ற கருத்து இருக்க முடியாது என்பதோடு மனித உடல்கள் இறைவன் அற்புதம் என்று முடிக்கிறேன்.

இறைவன் எல்லாவற்றையும் நன்கறிந்தவன்.


ஆக்கம்: அபூரம்லா
நன்றி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக